தமிழ்நாடு

ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் - ஓபிஎஸ்

ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் - ஓபிஎஸ்

webteam

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி - கூடிய விரைவில் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம் "நடைபெற இருக்கிற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் விருப்பம் என்ன என்பது குறித்தும். அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற ஒருமித்த கருத்து குறித்துதான் இன்றைக்கு முக்கியமாக பேசப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி கூடிய விரைவில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வரும். மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். அதனால் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அதிமுகவை பொருத்தவரை ஜனநாயக முறையில் கழக சட்ட விதிப்படி நடத்தப்பட்ட கழக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அது தான் இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமான பதவியாக நிலை கொண்டுள்ளது.

இருவரும் சேர்ந்து கையொப்பமிட்டால் தான் அங்கு இரட்டை இலை கிடைக்கும் சூழல் உள்ளது. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தாமாகவே கழக சட்ட விதிக்கு புறம்பாக சட்ட விரோதமாக கூட்டப்பட்ட அந்த பொதுக் குழுவில் இடைக்கால பொதுச் செயலாளர் என்று அறிவித்தார். இது கழக சட்ட விதியில் இல்லை.

அதேபோல், எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆக இப்போது அதிமுகவில் கழக ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது. உறுதியாக இரட்டை இலை சின்னம் ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய எங்களுக்கு தான் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

பாஜக ஆதரவு நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்... தேசிய கட்சியாக நாட்டை பாஜக ஆண்டு கொண்டு இருக்கிறது. 17 மாநிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுகின்ற பொறுப்பை பாஜக ஏற்றுள்ளது. உலக அரங்கில் மோடி அவர்கள் எடுத்து வைக்கின்ற பல்வேறு பிரச்னைகள் இந்தியாவின் தனித்தன்மையை நிரூபிக்கின்றது. மீண்டும் பாஜக ஆளுகின்ற ஒரு சூழல் இந்தியாவில் உருவாகியுள்ளது. அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் இருக்கும். அவர்கள் விருப்பப்பட்டால் எங்களுடைய தார்மீக ஆதரவை தெரிவிப்போம்.

மக்கள் நலனை கருதில் கொண்டு அதிமுக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ எந்த நிலையை மறுக்கின்ற தலைவர்கள் ஒத்துக் கொண்டால் ஒரு உறுதியான நிலை ஏற்படும். ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் தொண்டர்கள் விரும்புகின்றனர் அதைத்தான் நாங்கள் சொல்கின்றோம்.

எடப்பாடி பழனிசாமி தனி வழி என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு "பாதை மாறிப் போனால் ஊர் வந்து சேராது எடப்பாடி பழனிசாமி என்றைக்குமே ஊர் வந்து சேர மாட்டார். எங்களுடைய பண்பாடு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சிகளை சந்திக்கிறோம் அவர்கள் எப்படி என்று தெரியவில்லை" என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார்.