உள்ளாட்சி தேர்தலை மே 14-ம் தேதிக்குள் நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் சேர்ந்து செயல்ப்பட வேண்டும் எனவும் தமிழக அரசின் உதவியை பெறும் தேர்தல் ஆணையம் அதன் பிறகு தன்னிச்சையாக செயல்ப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. உள்ளாட்சி தேர்தலுக்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படலாம் எனவும் அதிகாரிகளின் பணி நேரம் நீட்டிக்கப்படலாம் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. உள்ளாட்சி தேர்தலை நடத்த மூன்று மாத அவகாசம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது
நீதிமன்ற உத்தரவின் படி மே 14-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் மே 15-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தேர்தல் ஆணையம் சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். பிரச்சனைகளை தீர்க்கவே நீதிமன்றம் எனவும் அரசை நடத்த அல்ல எனவும் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்த பிறகு மனுவிற்கு மேல் மனு தாக்கல் செய்வது, கேலிகூத்தாக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வரும் மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனி நீதிபதி வழிகாட்டுதல்களின் படி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளை இறுதி செய்யும் பணி இரண்டு முறை நடந்ததாகவும் ஊரக வளர்ச்சி துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வாக்குச்சாவடி மையங்களை இறுதி செய்யும் பணியில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய 95 நாட்கள் ஆகும் என தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளதாகவும் இடையில் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தல் ஈடுபட்டதால் அந்தப் பணியில் தாமதம் ஏற்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால் மே 14க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் கோரியது. தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் எப்போது தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிடப்படவில்லை.