தமிழ்நாடு

இனி டெலிவரி ஊழியராக வேண்டுமானால் நன்னடத்தை சான்று கட்டாயம்..!

இனி டெலிவரி ஊழியராக வேண்டுமானால் நன்னடத்தை சான்று கட்டாயம்..!

jagadeesh

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள்போல் வரும் நபர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதால், இனி அந்நிறுவனங்கள் புதிதாக டெலிவரி ஊழியர்களை பணியமர்த்தும்போது காவல் நன்னடத்தை சான்று பெற்றிருப்பது அவசியம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 68 புல்லட்டுகளை திருடிய கும்பல் கடந்த வாரம் சிக்கியது. திருட்டு கும்பல் இரவு நேரங்களில் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள்போல் சீருடை அணிந்து கொண்டு காவல்துறையினருக்கு சந்தேகம் வராமல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதேபோல அண்மைக்காலமாக வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களிலும் டெலிவரி ஊழியர்கள் பலர் சிக்கியுள்ளனர்.

உணவு கொண்டு செல்வதுபோல் போதை பொருட்களை கடத்திச் சென்ற நபர்களும் சிக்கினர். அவர்களில் பலர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஊழியர்களாகவும், சிலர் முன்னாள் ஊழியராகவும் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டெலிவரி ஊழியர்களை பணியமர்த்தும் முன்பு அவர்கள் காவல்துறை நன்னடத்தை சான்று பெற்றிருக்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காவல் துறையின் இணைய சேவையான CCTNS மூலம் காவல் நன்னடத்தை சான்று பெறலாம் எனவும் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.