எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் கைது pt
தமிழ்நாடு

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு: திமுக எம்எல்ஏ மகன் மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: முகேஷ்

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள்

இதையடுத்து ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், பெற்றோர் இல்லாமல் தங்கள் நான்கு வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும், விசாரணை முறையாக நடைபெறவில்லை எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு தொடர்பாக 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், தகுதியான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், புலன் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாட்சிகளை கலைக்கக் கூடும் என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

court order

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரண்டு வாரங்களுக்கு நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.