தமிழ்நாடு

ஈரோடு: அரசு பள்ளி கழிவறையை மாணவ, மாணவிகள் கழுவும் வீடியோவால் சர்ச்சை

ஈரோடு: அரசு பள்ளி கழிவறையை மாணவ, மாணவிகள் கழுவும் வீடியோவால் சர்ச்சை

Sinekadhara

ஈரோடு அருகே அரசு பள்ளி கழிவறையை மாணவ, மாணவிகள் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குறிப்பிட்ட அளவு மாணவ மாணவிகள் படித்துவரும் நிலையில் தலைமை ஆசிரியையாக மைதிலி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளி கழிவறையை 4ஆம் வகுப்பு மாணவன் மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவி சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அச்சிறுவர்கள், தினமும் பள்ளிக்கு முதலில் வருபவர்கள் சுத்தம் செய்யவேண்டும் என ஆசிரியர்கள் கூறியதாகத் தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் பரவிய இவ்வீடியோவால் பள்ளிமேல் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணை முடிவிற்கு பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதே போன்று ஈரோடு மாவட்டம் பெரியூரில் கடந்த மாதம் மாணவர்களை தலைமை ஆசிரியை வண்ணம் அடிக்க சொன்னதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் பள்ளியில் மாணவர்கள் வேலை செய்வது போன்று வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.