விவசாய தொழிலாளிகள், வீடு இல்லாத அனைவருக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், புதுப்பட்டினம், செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், விவசாய தொழிலாளர்கள் மற்றும் வீடு இல்லாத அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். கடுமையாக உழைக்கின்ற விவசாயிக்காகவே அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டதாகவும், இன்றும் விவசாயத்தில் ஈட்டும் வருமானத்தை ஒரு விவசாயியாக வருமான வரித்துறையினருக்கு கணக்கு காட்டிக்கொண்டிருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது தெரிவித்தார்.
திருப்போரூரில் நடத்தப்பட்ட பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர், பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலனுக்காகத் தான் பிரதமரை சந்திக்க சென்றதாகவும், ஆட்சியை தக்கவைக்க டெல்லி செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார். திமுகவினர்தான் குடும்ப நலனுக்காக டெல்லி செல்வது வழக்கமாக கொண்டிருந்ததாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும் அதிமுகவினர் மிட்டா மிராசுதாரர்கள் அல்ல எனக்கூறிய அவர், திமுகவினர் தான் கோடீஸ்வரர்கள் என பேசினார்.