தமிழ்நாடு

இறந்தவரின் உடலை தூக்கி ஆம்புலன்சில் ஏற்ற உதவிய பெண் காவலருக்கு குவியும் பாராட்டுகள்

இறந்தவரின் உடலை தூக்கி ஆம்புலன்சில் ஏற்ற உதவிய பெண் காவலருக்கு குவியும் பாராட்டுகள்

Sinekadhara

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறந்த நபரின் உடலை தூக்கி எடுத்துச்செல்ல உதவிய பெண் தலைமைக்காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து வரக்கூடிய நிலையில் தமிழக காவல்துறையிலும் 21 சதவீதம் பெண்கள் பணியாற்றி முக்கியப்பங்கு வகித்து வருகின்றனர். நேற்று மகளிர் தினத்தில் பெரியமேடு பெண் தலைமைக் காவலர் லீலாஸ்ரீ சமூக வலைதளங்களில் அனைவரது பாராட்டு மழையிலும் நனைந்துள்ளார். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகில் அடையாளம் தெரியாத நபர் மயங்கிக் கிடப்பதாக கடந்த 7-ம் தேதி காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து பெரியமேடு ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

மயங்கி விழுந்த நபரைத் தூக்க அங்கு சென்ற தலைமைக் காவலர் லீலாஸ்ரீ மற்றும் காவலருக்கு உதவி செய்ய பொதுமக்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து தலைமைக் காவலர் லீலாஸ்ரீ ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தார். ஆனால் வர தாமதமானதால் தொண்டு நிறுவன ஆம்புலன்ஸ் அங்கு வரவழைக்கப்பட்டது. அப்போது ரயில் நிலையத்திற்கு வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் மயங்கி விழுந்த நபரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இறந்துபோன நபரின் உடலைத் தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்குக்கூட பொதுமக்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் லீலாஸ்ரீ மற்றும் காவலர் இருவரும் தூக்கி ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் ரமேஷ் (42) என்றும் அவர் திருத்தணியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திருத்தணி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபோது வலிப்பு வந்து இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

இறந்தவரின் உடலை தூக்கிய பெண் காவலரின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானதை அடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளர் முகமது பரகத்துல்லா பெண்கள் தினத்தன்று லீலாஸ்ரீயை அழைத்து பாராட்டி பரிசளித்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு லீலாஸ்ரீயின் கணவர் இறந்து விட்டதால் ஒரு உயிரின் மதிப்பு என்ன என்பது தனக்கு தெரியும் என அவர் அதிகாரிகளிடம் கூறியது மெய்சிலிர்க்க வைத்தது. பெண் தலைமை காவலர் லீலாஸ்ரீயை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி வெகுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.