தமிழக ஆந்திர மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவர் ஜி.ஜி. சிவா என்பவர் புகார் மனுவை அளித்துள்ளார். இரு மாநில மக்களிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதால் பவன் கல்யாணை சென்னை காவல் துறை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து பவன் கல்யாண் மறைமுகமாக தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையாகின. இது சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே வார்த்தை மோதலாக உருவெடுத்துள்ளது. உதயநிதியை கண்டிக்கும் வகையில் ஆந்திராவில் பல போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. உதயநிதியின் போஸ்டரை அவமதிப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இந்தப் பின்னணியில் பவன் கல்யாண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.