தமிழ்நாடு

தேர்தலில் பட்டியலின பெண்ணை ஆதரித்த நபர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக அதிர்ச்சி புகார்!

தேர்தலில் பட்டியலின பெண்ணை ஆதரித்த நபர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக அதிர்ச்சி புகார்!

webteam

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட பட்டியலின பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்த நபர்களை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்ததாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட பனங்காட்டேரி மற்றும் காமனூர்தட்டு ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலினத்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இந்நிலையில், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்துமதி பாண்டியன் என்ற பட்டியலின பெண்ணை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவரே ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலின பெண் பதவியேற்கக் கூடாது என நாயக்கனேரி பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி நாயக்கனேரி ஊராட்சி மன்ற ஒன்றிய குழு வார்டு எண் 24 உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று அதில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவியிற்கு போட்டியிட இந்துமதி பாண்டியன் ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி நாயக்கனேரி மற்றும் காமனூர்தட்டு பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டோரை நாயக்கனேரி பஞ்சாயத்து நிர்வாகத்தை சேர்ந்த முன்னாள் தலைவர் சிவக்குமார் என்பவர் ஒதுக்கி வைத்துள்ளார்.

மேலும், தங்களிடம் பால் வாங்கக் கூடாது எனவும், விவசாய பணிகளில் ஈடுப்படக் கூடாது எனவும் ஊரில் இந்துமதிக்கு ஆதரவு தெரிவிப்போரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட நாயக்கனேரி காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்த நபர்கள் நாயக்கனேரி பஞ்சாயத்து நிர்வாகியான சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.