செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை 11 மணி முதல் பகல் 1.30 மணி வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அந்த கூட்டணியில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த கூட்டத்தை நடத்த நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே அறந்தாங்கி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி வாங்கிவிட்டு காலை 11 மணி முதல் 1:30 மணி வரை கூட்டம் நடத்தியுள்ளனர். அதேபோல் இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக பெண் நிர்வாகிகள் உள்ளிட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற நிலையில், அந்தப் பெண்களுக்கு தலா ஆயிரம் வீதம் 2000 ரூபாயை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். மேலும் பணம் வழங்கும்போது பாஜக பெண் நிர்வாகியிடம் சண்டை போட்டுக் கொள்ளாமல் பிரித்துக்கொள்ள வேண்டும் என நகைச்சுவையாகவும் பேசினார். ஆரத்தி எடுத்த பெண்களுக்கு வேட்பாளரே நேரடியாக பணம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், தேர்தல் ஒளிப்பதிவு கண்காணிப்புக் குழுவினர் இது தொடர்பாக அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்தது, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கூட்டத்தை நடத்தாமல் அனுமதிக்கப்படாத நேரத்தில் கூட்டத்தை நடத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் (143, 283, 171இ) ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நிர்வாகிகள் சிலரையும் சேர்க்கப் போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.