பாஜக பேரணியில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 6 அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், "கடந்த 28-ம்தேதி சேப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து பேரணி நடைபெற்றது. இதில் பேரணியில் கலந்து கொண்ட சிலர் டெல்லி எரிந்தது, அடுத்தது சென்னை எரிய வேண்டுமா? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றது அதிர்ச்சியளித்தது.
தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்ட அடையாளம் தெரியாத அந்த நபர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்ட அந்த நபர்களின் படத்தையும் காவல்துறையிடம் வழங்கி உள்ளோம்" என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.