தமிழ்நாடு

வைரமுத்து மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு

Rasus

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பாடலாசிரியர் வைரமுத்து மீது சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ராஜபாளையத்தில் ஜனவரி 7-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து பங்கேற்று ஆண்டாள் குறித்து உரையாற்றினார். இந்தக் கருத்தரங்கில் சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களைக் குறிப்பிட்டு வைரமுத்து பேசும்போது, ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. வைரமுத்துவின் இந்தப் பேச்சுக்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் எழவே, அதற்கு வைரமுத்து வருத்தமும் தெரிவித்துவிட்டார். இருப்பினும் அதுதொடர்பான சர்ச்சைகளும், விவாதங்களும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில், வைரமுத்து மீது சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து கடவுள் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பாடலாசிரியர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சமுதாய நல்லிணக்க பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.