கே.பாலகிருஷ்ணன்  File Image
தமிழ்நாடு

”அதிகார துஷ்பிரயோகம்.. இழிவான பேச்சு” - கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் மீது மார்க்சிஸ்ட் புகார்!

webteam

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் ரகுபதி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ”பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், தூய்மைப் பணி உள்ளிட்டு பல்வேறு துறைகளில் அறிவித்துள்ள தனியார்மயமாக்கல், வரி உயர்வு, மாநகராட்சி பள்ளிகள் மூடல் மற்றும் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 28 ஆம் தேதி ரிப்பன் மாளிகை அருகே எனது தலைமையில் போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

Complaint copy

சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள விக்டோரியா கட்டட நுழைவு வாயில் அருகில் ஆர்ப்பாட்டத்திற்காக கட்சியினர் திரண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு அப்பகுதிக்கு நானும் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களும் சென்றபோது, கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் ரகுபதி இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக 50 மீட்டர் தள்ளி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு எங்களிடம் தெரிவித்தார். அவர் கூறியபடி 50 மீட்டர் தள்ளி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எங்களது கட்சியினரோடு சென்றோம். ஆனால், அவர் உட்புற சந்தில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு வலியுறுத்தியதுடன் காவல்துறையினர் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை பிடித்து தள்ளினர். பெண்கள் என்றும் கூட பாராமல் அவர்களையும் பிடித்து தள்ளினார்.

அப்போது அவரிடம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்காமல் தடுப்பது மற்றும் தள்ளி விடுவது சரியா? என கேட்ட போது, துணை ஆணையர் ரகுபதி எங்களை ஒருமையில் பேசியும், கையை வைத்து தள்ளியும், அடாவடித்தனமாக செயல்பட்டார். இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்த போது 'கைது செய்ய வேண்டி வரும்" என மிரட்டும் வகையில் சத்தம் போட்டார். பத்திரிகையாளர்களையும், ஊடகவியலாளர்களையும் புகைப்படம், ஒளிப்படம் எடுக்க விடாமல் தடுத்து மிரட்டினார். கடைசி வரையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கே அவர் அனுமதிக்கவில்லை. அனைத்தையும் பொறுத்துக் கொண்டு சுமூகமாகப் போராட்டத்தை முடிக்கும் வகையில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்து விட்டு கலைந்து செல்ல ஆரம்பித்த உடன், என்னிடம் 'உங்களை கைது செய்கிறோம் என்று கூறி வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.

Complaint copy

சென்னை மாநகருக்குள் மக்கள் பிரச்னைகளில் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்குவதில்லை. மாறாக, மக்களுக்கு சம்பந்தமே இல்லாத இடத்தை ஒதுக்கி ஆர்ப்பாட்டத்தை நடத்த நிர்ப்பந்திக்கின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நடைமுறை இல்லை. சென்னை மாநகர காவல்துறையினரின் இந்த போக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளது. ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஒரு சாதாரண ஆர்ப்பாட்டத்தை, அமைதியான முறையில் நடத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எந்த இடையூறுமின்றி செயல்படுத்த வேண்டிய துணை ஆணையர், இதற்கு மாறாக, அனாவசியமாக அதட்டும் தொனியிலும், ஒருமையில் பேசியும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையல் நடந்து கொண்டுள்ளார்.

அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் எங்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு அதனை சீர்குலைக்கும் நோக்கோடும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.