தமிழ்நாடு

கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க நித்யானந்தாவிடம் அனுமதி கேட்பதா? - ஆட்சியரிடம் புகார் மனு

webteam

கைலாசா நாட்டிற்கு கடிதம் எழுதிய மதுரையைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நித்யானந்தா கூறிவரும் கைலாசா நாட்டில் உணவகம் வைக்க அனுமதி கோரி நேற்று முன்தினம் மதுரையிலுள்ள டெம்பிள்சிட்டி ஹோட்டல் அதிபர் குமார் என்பவர் அவருக்கு (நித்யானந்தா) கடிதம் எழுதி வெளியிட்டார். அதைப்பார்த்த சில மணிநேரங்களில் நித்யானந்தா நேரலையில் தோன்றி பதில் அளித்தார். உணவகத்திற்கு விரைவில் அங்கீகாரம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், டெம்பிள்சிட்டி குமார் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு அரசால் தேடப்படும் பாலியல் வழக்கு குற்றவாளியான நித்யானந்தாவிற்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான முத்துக்குமார் என்பவர் இன்று மதுரை ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்துகுமார் “குற்றவாளியான நித்யானந்தாவை நல்லவர் போல காட்டும் முயற்சியில் குமார் ஈடுபட்டு வருகிறார். தனது வாடிக்கையாளர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்படுகிறார். எனவே அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.