தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கையுடன் பிரச்னை எழும் நிலையில் ஆந்திர மாநில மீனவர்களுடனும் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் சில்கா ஏரிக்கு அடுத்ததாக நீண்ட உப்பு நீர் ஏரியாக கருதப்படுவது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரி. இந்த ஏரி திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா வரை நீண்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட மீனவர்களும், ஆந்திர மீனவர்களும் பழவேற்காடு ஏரியில் தான் மீன்பிடிதொழில் செய்து வருகின்றனர்.
பாரம்பரியமாக இரு மாநில மீனவர்களும் மீன் பிடித்து வரும் போதிலும், அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடிப்பதில் தகராறு ஏற்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆந்திர மீனவர்கள், தமிழக மீனவ கிராமமான சின்ன மாங்காடு கிராமத்தை தீக்கிரையாக்கினர். இந்நிலையில், இரு மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட குருவித்திட்டு பகுதியில் ஆந்திர மீனவர்கள் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மீன்வளம் சுரண்டப்பட்டு மீன்களின்றி வெறுங்கையோடு கரை திரும்பியதாக திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழக, ஆந்திர மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னை குறித்து பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமியிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் தமிழக மீனவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு மாநில மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட தமிழக அரசு வழிவகுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அடுத்த வாரம் இரு மாநில மீனவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு ஆட்சியர் முத்து தெரிவித்துள்ளார்.