அம்பத்தூரில் முன்விரோதம் காரணமாக குண்டரை ஏவி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை தாக்கியதாக பாஜக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (70) இவர், கொரட்டூரில் சீனிவாச என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார், இந்நிலையில் சூப்பர் மார்க்கெட் எதிரே உள்ள இவரது இடத்தில் 2018ஆம் ஆண்டு முதல் பாஜக பிரமுகர் ஜெகதீஷ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் டீக்கடையை காலி செய்யும்படி ஜெகதீஷிடம் கந்தசாமி கூறியுள்ளார், அதற்கு ஜெகதீஷ் மூன்று மாதம் அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த வாரம் கந்தசாமி மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜெகதீஷ், கந்தசாமியை தாக்கியுள்ளார், இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் கந்தசாமி புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்ம நபர் வாடிக்கையாளர் போல வந்து பொருட்கள் வாங்குவது போல் நடித்து கந்தசாமியின் மனைவியிடம் பொருட்கள் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அவர், பொருட்களை எடுக்கச் சென்றார்.
அப்போது அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் க்ந்தசாமியின் தலையில் சரமாரியாக தாக்குகிறார். இதில் நிலைகுலைந்த கந்தசாமி கீழே விழுந்ததை அடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாஜக நிர்வாகி ஜெகதீஷ் மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, பலத்த காயத்துடன் கந்தசாமி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்,