தமிழ்நாடு

சின்னதம்பியால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் - ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர்

சின்னதம்பியால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் - ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர்

webteam

காட்டுயானை சின்னதம்பியால் ஏற்பட்ட பயிர்கள் சேதத்துக்கு உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்கப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கண்ணாடி புத்தூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பியை பிடிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால் சின்னதம்பியை பிடிக்கும்போது காயப்படுத்தவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது எனவும் அறிவுறுத்தியது. இதனையடுத்து சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் முனைப்பு காட்டினர். 

அதன்படி திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையை இன்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மேலும் சுயம்பு மற்றும் கலீம் கும்கி யானைகள் உதவியுடன் யானையை லாரியில் ஏற்றி முகாமுக்கு அழைத்துச்செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சின்னதம்பி யானை பிடிக்கப்பட்டது குறித்து பேசிய ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன்,  சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணமில்லை என்று தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், காலை 4 மணி முதல் காட்டு யானை சின்னதம்பியை  மயக்க ஊசி பிடிக்க நடவடிக்கை எடுத்தோம். காலை 9.30 மணி அளவில் மயக்க ஊசியானது செலுத்தபட்டது. 4 வது முறையாக போடப்பட்ட ஊசி சின்னதம்பி யானை மீது பதிந்தது.

8 மி.லி மயக்க மருந்து சின்னதம்பி யானைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சின்னதம்பி யானையை முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரகலியார் பகுதியில் கூண்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கட்டளைகளை புரிந்து கொண்டு செயல்படவே சின்னதம்பிக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. 60 க்கும் மேற்பட்ட கட்டளைகள் சின்னதம்பி யானைக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றன. சின்னதம்பியால் ஏற்பட்ட பயிர்கள் சேதத்துக்கு உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.