சென்னை காவல் ஆணையர் அருண் - மனித உரிமைகள் ஆணையம் PT Web
தமிழ்நாடு

‘ரவுடிகளுக்கு அவர்களின் மொழியிலேயே...’ காவல் ஆணையர் அருண் விளக்கமும், மனித உரிமைகள் ஆணைய உத்தரவும்!

குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ரவுடிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேசியதாக சென்னை மாநகர காவல் ஆணையர், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

சென்னையில் ரவுடிகளை என்கவுண்டர் செய்து விடும் தொணியில் பேசி, அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக உதவி ஆணையர் இளங்கோவனுக்கு எதிராக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, “ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து விளக்கமளிக்கவும்” என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

மனித உரிமை ஆணையம்

அதன்படி மாநகர காவல் ஆணையர் அருண் தாக்கல் செய்த விளக்க மனுவில், “எவரையும் மிரட்டும் வகையில் தான் கருத்து தெரிவிக்கவில்லை. குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன்” என விளக்கமளித்துள்ளார்.

இதை பதிவு செய்து கொண்ட மனித உரிமை ஆணையம், வழக்கில் இருந்து காவல் ஆணையரின் பெயரை நீக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.