பாடகி சித்ரா - ராமர் கோயில் puthiya thalaimurai
தமிழ்நாடு

ராமர் கோயில் தொடர்பான பாடகி சித்ராவின் கருத்து... விமர்சனங்களும் ஆதரவும்!

ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நேரத்தில் ராமர் நாமத்தை உச்சரித்து, வீட்டில் தீபம் ஏற்றி வைக்கவேண்டும் என்று பாடகி சித்ரா தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

PT WEB

பிரபல பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா ஒரு வீடியோவில், “அயோத்தியில் வரும் 22ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் 12: 20 மணிக்கு அனைவரும் ஸ்ரீராமா, ஜெயராமா, ஜெயஜெயராமா என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மாலையில் வீட்டில் ஐந்து திரிகள் கொண்ட தீபத்தை ஏற்றி வைக்கவேண்டும். இதன்மூலம் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்கவேண்டும்” என கூறியிருந்தார்.

இதையடுத்து இக்கருத்துக்கு எதிராக விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது.

பாடகர் சூரஜ் சந்தோஷ்

“ஒரு மசூதியை இடித்துவிட்டுதான் கோயில் கட்டப்பட்டது என்ற வரலாற்றை மறந்துவிட்டு "லோக சமஸ்தா சுகினோ பவன்து" என கூறுபவர்களின் அப்பாவித்தனம் இதில் தெரிகிறது. இன்னமும் எவ்வளவு சிலைகள் ஒவ்வொன்றாக உடைக்கப்படவுள்ளன? இன்னமும் எவ்வளவு கே.எஸ் சித்ராக்கள் தங்களது உண்மை முகத்தை காட்டப் போகிறார்கள்...?” என்று விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் இந்து மேனன்

“மக்கள் ரத்தத்திலும், வலியிலும் அமர்ந்து எவ்வளவுதான் உச்சரித்தாலும் ராமரோ, விஷ்ணுவோ தோன்றப் போவதில்லை. 5 லட்சம் தீபங்களை ஏற்றி வைத்தாலும் உங்கள் உள்ளம் ஒளியால் நிரம்பப் போவதில்லை. மக்கள் இனிமையான குரலால் குயில் என அவரை கருதினார்கள். அப்படியானவர் இன்று போலியான குயில் என நிரூபிக்கப்பட்டிருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

இதேபோல சித்ராவுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன.

அதன்படி, “இதுநாள்வரை எந்த சர்ச்சையிலும் சிக்காத சித்ரா, தற்போது தன்மீதான விமர்சனங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கருத்து வேறுபாடுகளிருந்தாலும், நமக்காக ஏராளமான பாடல்களை பாடிய அவரை மன்னிக்கமுடியாதா?” என பாடகர் வேணுகோபால் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சின்னக்குயில் என அழைக்கப்படும் சித்ரா திரைப்பட பின்னணிப் பாடல்களுக்காக 6 முறை தேசிய விருதுகளையும், 6 மாநிலங்களில் 36 மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார். பத்ம பூஷண் விருது பெற்ற ‘சின்னக்குயில்’ சித்ரா 25 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்பட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.