தமிழ்நாடு

“நீங்கள்தான் என் முன்மாதிரி”- கடிதத்தால் நெகிழ்ந்துபோன மாவட்ட ஆட்சியர்..!

“நீங்கள்தான் என் முன்மாதிரி”- கடிதத்தால் நெகிழ்ந்துபோன மாவட்ட ஆட்சியர்..!

webteam

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மாணவர்ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு மாணவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் அவர் ஆட்சியரின் பணிகளை பாராட்டி உள்ளார். இதனை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தொழில்நுட்ப காலத்தில், மாணவர் ஒருவர் எனக்கு தனது கைப்பட கடிதம் எழுதியிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 

அந்தக் கடிதத்தில், “நான் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நான் தற்போது முதலாம் ஆண்டு பி.ஏ.ஆங்கிலம் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏழை மக்களுக்கு ஆற்றும் பணிகள் மற்றும் இக்கட்டான சூழல்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. நீங்கள்தான் எனக்கு முன்மாதிரியான நபர். நீங்கள் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் நபர். வாழ்வில் என்னுடைய லட்சியம் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவதுதான். அத்துடன் ஆசிரியராகி என்னுடைய மாணவர்களுக்கு நல்ல முறையில் கற்பித்து, அவர்களை சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. சமூகத்திற்கான உங்களுடைய பணி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

நீங்கள் கண்டிப்பாக வேலூர் மாவட்டம் வரவேண்டும். வேலூர் மாவட்டம் வந்தால் நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன். உங்களை நேரில் சந்தித்து உங்களுடன் தேநீர் அருந்த எனக்கு ஆசையாக உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு கல்லூரி படிக்கும் மாணவர் ஒருவர் தன் கைப்பட  உணர்ச்சிகரமாக கடிதம் எழுதியுள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.