தமிழ்நாடு

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் - 15 பேர் படுகாயம்

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் - 15 பேர் படுகாயம்

Rasus

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 15 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி- திண்டுக்கல் சாலை தீரன் நகர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும்,  நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.  இந்நிலையில் இன்று கல்லூரி நுழைவுவாயிலுக்கு முன்பாக இரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். 

கட்டை, கற்கள், பாட்டில்கள் போன்றவற்றை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில்  18 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த மாணவர்களில் 15 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் 15 மாணவர்களை காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த உதவி ஆணையர் மணிகண்டன், மாணவர்களிடையே விசாரணை நடத்தினார். சென்னையில் கல்லூரி மாணவர்கள் சாலையில் பட்டாக்கத்தியுடம் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருச்சியில் நடந்த மாணவர்கள் மோதல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.