உயிரிழந்த மாணவி சந்தியா  pt web
தமிழ்நாடு

கனமழை எதிரொலி: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்!

தேனியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சிலமலை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பம். இவருடைய கணவர் ரவி முத்து என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர்களுக்குச் சந்தியா என்ற ஒரு மகள் இருந்தார். இவர் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் தேனியில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழை காரணமாகப், புஷ்பத்தின் வீடு சேதமடைந்து சுவர்கள் விரிசல் விட்டுக் காணப்பட்டுள்ளது. இதனைப்பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதனைப் பொருட்படுத்தாமல் புஷ்பமும் அவருடைய மகள் சந்தியாவும் சேதமடைந்த வீட்டில் இருந்துள்ளனர்.

இடிந்து விழுந்த வீடு

இந்நிலையில் திடீரென வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இதில் மாணவி சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் புஷ்பம் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், உயிரிழந்த சந்தியாவை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி சந்தியா

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.