மாணவி அபிநயா புதியதலைமுறை
தமிழ்நாடு

காப்பீடு திட்டத்தை காரணம் காட்டும் மருத்துவமனை; காலில் தகட்டோடு சென்று ஆட்சியரிடம் முறையிட்ட மாணவி!

தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கி மாணவிக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு.. அறுவை சிகிச்சை செய்து வைக்கப்பட்ட தகட்டினை எடுக்கச் சென்றபோது இழுத்தடிக்கும் மருத்துவர்கள்.. நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மாணவி மனு!

யுவபுருஷ்

செய்தியாளர் - மாதவன் குருநாதன்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர், மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு படித்தபோது, தேர்வு நேரத்தில் குடவாசல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபொழுது, விபத்தில் சிக்கியதில் அவருடைய இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்த மருத்துவமனை நிர்வாகத்தினரும், மருத்துவ காப்பீடு அட்டை இருக்கிறதா என்று கேட்டுவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அவருடைய காலில் தகடு பொருத்தியுள்ளனர். இதன் பிறகு ஓராண்டு காலமாக அவர் கல்லூரிக்கு செல்லமுடியாத சூழல் ஏற்படவே, 2வது ஆண்டு கல்லூரி படிப்பு வீணாகியுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தகடை எடுக்க வேண்டிய சூழல் வந்ததையடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அபிநயா. ஆனால், அங்கிருந்த மருத்துவமனை நிர்வாகத்தினரோ, “மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு கொடுக்க வேண்டிய பணம் எங்களுக்கு வரவில்லை. உங்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் உள்ள அட்டையில் முகவரி மாறி இருக்கிறது. ஆகவே, இதை சரி செய்து வாருங்கள். அப்பொழுதுதான் காலில் உள்ள தகடை அகற்ற முடியும்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், 3ம் ஆண்டும் தன்னுடைய கல்லூரி படிப்பு கேள்விக்குறியாக உள்ளதாக மனக்குமறலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற மாணவி அபிநயா, “நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். என் தந்தைக்கு நாங்கள் மூவருமே பெண் பிள்ளைகள்தான். என்னுடைய காலில் உள்ள தகட்டினை அகற்றி, நான் கல்வி பயில உதவுங்கள்” என்று கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபொழுது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.