மாணவி நந்தினி PT Web
தமிழ்நாடு

கல்லூரியில் சேர முடியாமல் தவித்த மதுரை மாணவி: புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் கல்லூரியில் இடம்!

546 மார்க் எடுத்தும் ஏழை மாணவி ஒருவர், அரசு கல்லூரியில் சேர முடியாத பரிதவிப்பு குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த மாணவிக்கு மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

PT WEB

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் - பிரேமா தம்பதியினரின் மகள் நந்தினி. தனியார் அரிசி அறவை ஆலையில் சுமை தூக்கும் தொழிலாளியின் மகளான நந்தினி அரசுப் பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவில் நடந்து முடிந்த 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் 546 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே மூன்றாவது மாணவியாக வந்துள்ளார்.

இந்த நிலையில், கல்லூரியில் சேரக்கூடிய நேரத்தில் மாணவி நந்தினிக்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனது. மேலும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர் யாருமே கல்வியறிவு இல்லாத காரணத்தினால் மாணவியை கல்லூரியில் சேர்ப்பதற்கு உரிய விழிப்புணர்வு இல்லாமல் போய் உள்ளது. இதனிடையே மாணவி மதுரை அரசு மீனாட்சி கல்லூரியில் சேர்வதற்கு இறுதிக்கட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்லூரியில் சேர்வதற்காக சென்று இருக்கிறார். அங்கு, அதிக மதிப்பெண் பெற்றிருந்த காரணத்தினால் கல்லூரியில் மாணவிக்கு இடமும் ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்ட அரசு அதிகாரிகளும், பல்வேறு நாடுகளில் இருந்தும் பலரும் மாணவிக்கு தொடர்புகொண்டு உதவுவதாக முன்வந்தனர்.

புதிய தலைமுறையில் செய்தி வெளியீடு

இந்த நிலையில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மதுரை மாவட்ட ஆசிரியர் சங்கீதா ஆகியோர் பரிந்துரையின் பேரில் மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மேற்கண்ட மாணவிக்கு பி.காம் பாடப்பிரிவில் சீட்டு ஒதுக்கப்பட்டு தற்போது கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.

புதிய தலைமுறை செய்தி

முதல்முறையாகக் கல்லூரியில் அடியெடுத்து வைத்துள்ளதன் மூலம் மாணவி நந்தினி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, “மதுரை மாணவி நந்தினி அருள்மிகு மீனாட்சி அரசுக் கல்லூரியில் BCom பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தலையிட்ட, கவனப்படுத்திய, உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி” என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.