வாடகைப் பணம் 4.5 லட்சம் ரூபாய் அளிக்காததால் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை காலி செய்ய கூறி கட்டடத்தை வாடகைக்கு அளித்த கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவானது. செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக ஜான் லூயிஸ் என்பவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தெ.கண்ணன் என்பவரும் நியமிக்கப்பட்டனர். அதில் வருவாய்த் துறைக்கு முறைப்படி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணி செய்து வருகின்றனர்.
ஆனால் காவல்துறையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்.பி கண்ணன் தவிர மற்ற காவலர்கள் யாருக்கும் தமிழக அரசின் பணி ஆணை வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அலுவலகத்தில் உள்ள கட்டடத்தை வாடகை எடுத்து அதில் எஸ்பி அலுவலகம் இயங்கி வருகிறது. காவல்துறை என்பதால் முன்பணம் வேண்டாம் எனக்கூறி மாத வாடகை மட்டும் 45 ஆயிரம் ரூபாய் அளிப்பது என 11 மாதங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் தற்போதுவரை கல்லூரிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணம் சுமார் 4.5 லட்சம் ரூபாயை காவல்துறை சார்பில் அளிக்கப்படவில்லை என கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது. சுமார் பத்து மாதங்களாக ஒரு நயா பைசா கூட வாடகை அளிக்காத காரணத்தினால் கல்லூரி நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இது செங்கல்பட்டு மாவட்ட காவலர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது .
ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நிறுவப்படும் என தமிழக அரசு கூறி வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டும் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசாணை வெளியிடப்பட்டு கடந்த 10 தினங்களுக்கு முன் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டி உள்ளார்.
வாடகை உள்ள கட்டடத்திற்கு பணத்தை கூட அளிக்க முடியவில்லை என்பது காவலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்றவர்கள் பிரச்னையில் தலையிட்டு தீர்வு காணும் காவல்துறைக்கே இந்த நிலை என்றால் நாங்கள் எங்கே போய் முறையிடுவோம் என காவல்துறையினர் புலம்பித் தள்ளுகின்றனர்.