தமிழ்நாடு

திருவாரூரில் பள்ளிக்கு வந்த மாணவர்களை மேளதாளம் முழங்க மாலையிட்டு வரவேற்ற ஆட்சியர்

திருவாரூரில் பள்ளிக்கு வந்த மாணவர்களை மேளதாளம் முழங்க மாலையிட்டு வரவேற்ற ஆட்சியர்

kaleelrahman

பள்ளி  மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் திருவாரூரில் மேள தாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், தொடர்ந்து பெய்த கன மழையால் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டதால் மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று பள்ளி வந்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையில் உள்ள 107 ஆண்டுகால பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் ஆகியோர் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மேளதாளங்களுடன் மலர் தூவி வரவேற்று, பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி கல்வி கற்க வருகை தரும் மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது .