தமிழ்நாடு

மாணவியின் கனவுக்காக தன் இருக்கையை கொடுத்த கரூர் கலெக்டர்

மாணவியின் கனவுக்காக தன் இருக்கையை கொடுத்த கரூர் கலெக்டர்

webteam

எதிர்காலத்தில் யாராக விரும்புகிறீர்கள் ? எனத் தேர்வில் கேட்கபட்ட கேள்விக்கு, கரூர் ஆட்சியராக விரும்புகிறேன் என மாணவி பதிலெழுதிய சம்பவம் குளிதலையில் நிகழ்ந்துள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஆங்கிலப்பாடத்திற்கான தேர்வில் 'நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆக ஆசைப்படுகிறீர்கள் ? என ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அத்துடன் உங்களின் முன்மாதிரி மனிதர் யார் ? எனவும் கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்விக்களுக்கு 6ஆம் வகுப்பு படிக்கு மனோப்ரியா என்ற மாணவி, “எதிர்க்காலத்தில் நான் மாவட்ட ஆட்சித்தலைவராக விரும்புகின்றேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட ஆட்சித்தலைவர்” எனப் பதில் எழுதியிருந்தார்.

இந்தத் தகவலை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பூபதி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வாட்ஸ்அப் வாயிலாக தெரிவித்தார். இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அந்த மாணவியை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துவர கூறினார். இதையடுத்து மாணவி மனோப்ரியா உள்ளிட்ட மாணவ, மாணவிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த ஆசிரியர் பூபதி, ஆட்சியரிடம் அறிமுகப்படுத்தினார். 

அப்போது மாணவி மனோப்ரியாவை ஊக்குவிக்கும் வகையில் அழைத்து பாராட்டிய ஆட்சியர், தனது இருக்கையில் அவரை அமர வைத்தார். அத்துடன் நன்கு படித்து எதிர்காலத்தில் தாங்கள் நினைத்ததைப்போல் ஒரு மாவட்ட ஆட்சித்தலைவராக உருவாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனவும் வாழ்த்தினார். ஆட்சியரின் இந்தச் செய்கையால் மாணவி மனம் மகிழ்ச்சி அடைந்து பூரித்துப்போனார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச்செய்தது.