தமிழ்நாடு

இறைச்சிக் கடைகளை 10 நாட்கள் அடைக்க நகராட்சி ஆணையாளர் போட்ட உத்தரவை ரத்து செய்த கலெக்டர்!

இறைச்சிக் கடைகளை 10 நாட்கள் அடைக்க நகராட்சி ஆணையாளர் போட்ட உத்தரவை ரத்து செய்த கலெக்டர்!

JustinDurai

இறைச்சிக் கடைகளை 10 நாட்களுக்கு அடைக்குமாறு பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் போட்ட உத்தரவை, தேனி மாவட்ட கலெக்டர் ரத்து செய்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆனையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் இருவரும் இணைந்து, கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். 

அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், மிருகவதை தடுப்புச் சட்டத்தின் படியும், எந்தவொரு விலங்கினையும் கொல்லக்கூடாது என்பதற்கான ‘பரூஷன் பர்வா’ அனுசரிக்கப்பட உள்ளதால் ஆகஸ்ட் 15 முதல் 24-ம் தேதி வரை 10 நாட்களுக்கு ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் விற்பனைக் கடை உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளிலும் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெரியகுளம் நகராட்சி சார்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இறைச்சிக் கூடங்கள் வழக்கம்போல் செயல்படலாம் என்று மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கும் கலெக்டர் தனது உத்தரவு நகலை அனுப்பியுள்ளார்.