தமிழ்நாடு

மதுரவாயால், வாலாஜாவில் ஜனவரி 18 வரை 50% சுங்கக் கட்டணம் வசூல் செய்க: உயர்நீதிமன்றம்

மதுரவாயால், வாலாஜாவில் ஜனவரி 18 வரை 50% சுங்கக் கட்டணம் வசூல் செய்க: உயர்நீதிமன்றம்

webteam

ஜனவரி 18 வரை மதுரவாயல், வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் டிசம்பர் 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 10 நாட்களில் 50 கோடி ரூபாய் செலவில் சாலையை மீண்டும் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், தற்போதுள்ள பள்ளங்கள் விரைவில் பழுதுபார்க்கப்பட்டு சரிசெய்யப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் சாலைகளின் தரம் உலக தரத்துக்கு இணையாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் மேற்பட்ட விபத்துகள் நடப்பதாக சுட்டிக்காட்டினர். பின்னர் மதுரவாயல் - வாலாஜா சாலை பழுது நீக்கம் செய்யும் வரை இரண்டு வாரங்களுக்கு அந்த சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆறு வழிச்சாலை பணிகள் நடந்து வருவதாகவும், சாலையில் குழிகள் நிரப்பப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி சத்தியநாராயணன், தான் வேலூர் சென்று வந்தபோது எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். பெயரளவிற்கே பணிகள் நடைபெறுவதாகவும், முழுமையாக முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இரு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இரண்டு வாரத்திற்கு விதித்த தடை பொங்கல் வரை நீட்டிக்கப்படும் என எச்சரித்தனர்.

லோனாவாலா மற்றும் ஆக்ராவில் உள்ளதுதான் தேசிய நெடுஞ்சாலையா என்றும், மதுரவாயல் - வாலாஜா சாலை எப்போது முதலில் அமைக்கப்பட்டது? எப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது? முறையாக பராமரிக்காத சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க எந்த சட்டம் வகைவகை செய்கிறது? என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர்.

எனவே ஜனவரி 18 வரை மதுரவாயல், வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஆறுவழிச்சாலை ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை எனவும் ஆம்புலன்ஸ்க்கு தனி வழி ஏன் ஏற்படுத்தவில்லை எனவும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதிலளிக்குமாறு நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டு ஜனவரி 18 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.