தமிழ்நாடு

துணை வேந்தர் கணபதி விவகாரம்: காசோலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

துணை வேந்தர் கணபதி விவகாரம்: காசோலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

webteam

 கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான லஞ்சப்புகார் வழக்கில் முக்கிய ஆதாரமான லஞ்சமாக பெறப்பட்ட காசோலை
காவல்துறையினரால் ஜோடிக்கப்பட்டது அல்ல என்று அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவிப்பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் துணை வேந்தர் கணபதி, இடைத்தரகராக செயல்பட்ட
வேதியியல் பேராசிரியர் தர்மராஜ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இதில், துணைவேந்தரை  மட்டும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கடந்த 8ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதனையடுத்து, துணைவேந்தர் கணபதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

விசாரணையின் போது ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர் சிவகுமார், துணைவேந்தரின் பணி நியமனம், பணி வரன்முறை என்ன
என்பது குறித்தும், இந்த வழக்கில் துணைவேந்தரின் பங்கு மற்றும் இதர நபர்களின் தொடர்பு குறித்தும் வழக்கின் முக்கிய ஆதாரமான
லஞ்சமாக பெறப்பட்ட காசோலை எங்கு உள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக கூறினார். 

கைது நடவடிக்கையின் போது சுமார் 16 மணி நேரம் காவல்துறையினர் உடன் இருந்தும் எவ்வாறு காசோலை மறைக்கப்பட்டிருக்கும்,
எனவே வழக்கை திசைத்திருப்ப காவல்துறையினரால் ஜோடிக்கப்பட்ட ஆதாரமே காசோலை என எதிர்த்தரப்பினர் வாதிட்டனர். இதனை
உடனே மறுத்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், கைது நடப்பதற்கு முன் தேதியிட்ட நாளான 2ஆம் தேதியே காசோலையின் எண்
நீதிமன்றத்திற்கு முன் கூட்டியே அனுப்பப்பட்டதை குறிப்பிட்டு வழக்கை திசைத்திருப்பவில்லை என்று உறுதி அளித்தார். 

மேலும், கைது நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்படும் அறிக்கையில், லஞ்சமாக
பெறப்பட்ட காசோலை எங்கு வைத்திருப்பதாக தெரியவில்லை என்று துணைவேந்தர் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
துணைவேண்டஹ்ர் எனக்கு தெரியாது என்று சொல்லியிருந்தால் இந்த காவலே தேவையில்லை என்றார். லஞ்சம் பெற்ற புகாரில்
கைதாகியுள்ள கணபதி, தவணை முறையில் பணத்தை பெறவே காசோலை வாங்கபட்டதாக கூறப்பட்டதில் உள்ள முரண்பாடு
கலைக்கப்பட்டுள்ளது.