செய்தியாளர்: பிரவீண்
கடந்த 2023 ஆம் ஆண்டு சத்ய பாண்டி என்பவர் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்த ஆல்வின் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆல்வினை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கோவை கொடிசியா மைதானம் பகுதியில், அவர் மறைந்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரைப் பிடிக்க உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் தலைமை காவலர் சந்திரசேகர் மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆல்வினை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது ஆல்வின் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் ராஜ்குமாரை தாக்கியிருக்கிறார்.
இதையடுத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் மூன்று ரவுண்டு சுட்டுள்ளார் இதில், 2 குண்டுகள் ஆல்வனின் முட்டிகளில் பாய்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஆல்வினை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். காவலர் ராஜ்குமாரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் துணை ஆணையர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய கொடிசியா மைதானத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில், காவல்துறையினர் முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். தடுப்புகள் அமைத்து துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் யாரும் நுழையாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.