தமிழ்நாடு

கமல்ஹாசன், வானதி சீனிவாசன், மயூரா ஜெயக்குமார்...- முக்கியத்துவம் பெறும் கோவை தெற்கு தொகுதி

கமல்ஹாசன், வானதி சீனிவாசன், மயூரா ஜெயக்குமார்...- முக்கியத்துவம் பெறும் கோவை தெற்கு தொகுதி

Sinekadhara

தமிழக சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ளவர் நடிகர் கமல்ஹாசன். இந்தத் தேர்தலில் அவரின் பயணத்தை பார்க்கலாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் 2018 ஆம் ஆண்டு தொடக்கினார். அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்ட நிலையில், அக்கட்சி சந்தித்துள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக்கட்சிகள் இணைந்துள்ளன. மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் களம்காண்கிறது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். இத்தொகுதியில், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அமமுக சார்பில் சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் உள்ளனர்.

கோவை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெற்கு தொகுதியில் மாநகராட்சி வார்டு எண் 21 முதல் 47 வரையிலான காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் மற்றும் இதரப் பகுதிகளைச் சேர்ந்த 26 வார்டுகள் இருக்கின்றன. வணிகம் மற்றும் கல்வி நிலையங்கள் நிறைந்த இத்தொகுதியில், படித்த இளைஞர்கள், வட மாநிலத்தவர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என பல தரப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நீதிமய்யம் போட்டியிடுகிறது. கோவை தெற்கில் கமல்ஹாசனும், சிங்காநல்லூர் தொகுதியில் அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதிமய்யத்திற்கு கோவை நகரப்பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்தன. அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் 1,44,829 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த அடிப்படையில் கமல்ஹாசன் கோவை தெற்கை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசனை பொறுத்தவரை இதுவே முதல் சட்டமன்றத் தேர்தல். இதனால் இத்தேர்தல் அவருக்கு எப்படிப்பட்ட திருப்பத்தை தரப்போகிறது என்று பார்க்கலாம்.