Tragedy pt desk
தமிழ்நாடு

கோவை: பாம்பை பிடிக்க முயன்ற பாம்புபிடி வீரருக்கு நேர்ந்த பரிதாபம் - வனத்துறை அறிவுறுத்தல்

கோவையில் பிரிண்டிங் நிறுவனத்தில் புகுந்த பாம்பை பிடிக்கச் சென்ற பாம்புபிடி வீரரை அதிக விஷம் கொண்ட கட்டுவிரியன் கடித்துவிட்டது. இதில் பாம்புபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

webteam

செய்தியாளர்: ஐஸ்வர்யா

கோவை காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் பாம்பு புகுந்ததாக கணுவாய் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான முரளிதரன் என்பவருக்கு அலைப்பேசி மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற முரளிதரன், மேஜைக்கு அடியில் இரண்டு பாம்புகள் இருந்ததை அறிந்துள்ளார். அதில் ஒரு பாம்பை பிடித்த முரளிதரன், மூன்று அடி நீளம் கொண்ட மற்றொரு கட்டுவிரியன் பாம்பை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் கால் பகுதியில் அந்தப் பாம்பு கடித்துள்ளது.

Snake catcher

இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சம்பவ இடத்திலேயே முரளிதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த வனத்துறை மற்றும் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனத்துறையினின் அறிவுரை

கோவை வனசரகத்திற்கு உட்பட்ட வனச்சரகரிடம் கேட்டபோது... முக்கியமான 3 விடயங்களை வலியுறுத்தினார்.

1) பாம்பு பிடிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி பெற வேண்டும். வனத் துறையினருக்கு தகவல் வரும் பட்சத்தில் அவர்கள் அனுப்பும் நபர்கள் பாம்பு பிடிப்பர். தனியாக யாருக்கேனும் அழைப்பு வரும்போது சம்பந்தப்பட்ட பாம்புபிடி வீரர், முறையாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

Snake

2) உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும். அதாவது, பாம்பு கடித்தாலும் பாதிப்பை ஏற்படாதவாறு கிளவுஸ் உள்ளிட்ட உடைகள், பாம்பை பிடிக்கும் பிரத்யேக குச்சி உள்ளிட்டவைகளை பின்பற்றி பாம்பு பிடிக்க வேண்டும்.

3) பாம்பு வந்தால் உடனடியாக வனத்துறையினரிடம் தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் 180042545456 என்ற உதவி எண்ணிற்கு அழைக்க வேண்டும்

என்றனர். இந்த சம்பவத்தை பொறுத்தவரை முறையாக தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.