தமிழ்நாடு

ரகு விபத்தின் போது பதிவான சிசிடிவி காட்சியா? வைரலாகும் புகைப்படம்

ரகு விபத்தின் போது பதிவான சிசிடிவி காட்சியா? வைரலாகும் புகைப்படம்

webteam

கோவை இளைஞர் ரகு விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கோவை இளைஞர் ரகு விபத்து, பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில், அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் என சில புகைப்படங்‌கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. விபத்திற்கு லாரி காரணம் என காவல்துறையினர் கூறும் நிலையில் அதனை உறுதி செய்யும்விதமாக லாரி ஒன்று ஒன்வேயில் வந்து சிக்னலில் திரும்புவது போல் உள்ள புகைப்படங்கள், கோவை மாவட்டம் முழுவதும் பரவி வருகிறது. காவல்துறையினரே இந்த புகைப்படத்தை பரப்பிவிட்டிருக்கலாம் என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து காவல்துறையினர் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

கோவையில் அதிமுக சார்பில் டிசம்பர் 3 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டப்பட உள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, வ.உ.சி பூங்கா முதல், விமான நிலையம் வரை தொடர்ச்சியாக கட்அவுட், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டன. இதில் சிங்காநல்லூர் அருகே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மீது மோதி இளைஞர் ரகு உயிரிழந்தார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்ப்புகள் எழுந்தவுடன், அவசர அவசரமாக, அந்த அலங்கார வளைவுகளை, கோவை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

இளைஞர் ரகு உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ரகுவின் மரணத்திற்கு அலங்கார வளைவுதான் காரணம் என்பது தெளிவாக தெரிகிறது. அலங்கார வளைவுதான் காரணம் என்றாலும் மரண விசாரணைக்குள் செல்ல விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சாலையை மறைத்து பேனர்களை வைக்க அதிகாரிகள் அனுமதித்தது எப்படி? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.