தமிழ்நாடு

கோவை பெட்ரோல் குண்டுவீச்சு: தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர்

கோவை பெட்ரோல் குண்டுவீச்சு: தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர்

webteam

கோவையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து மக்கள் முன்னணி கட்சிகளின் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் தவறான தகவலை பரப்பி இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரா தெரிவித்துள்ளார்.

கோவை நகர் பகுதி மற்றும் புற நகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அலுவலகங்களில் என தொடர்ச்சியாக 7 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இதையடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு காணொளிக் காட்சி ஆலோசனைக் கூட்டமானது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், “தலைமை செயலாளருடன் 17 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 7 சம்பவங்களிலும் அதிக பாதிப்பு எதுவும் இல்லை. பதட்டம் அடையும் சூழல் இல்லை. சம்பவங்கள் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

மத நல்லிணக்க கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 92 ஜமாத் தலைவர்களை அழைத்து பேசி இருக்கிறோம். இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். மேலும் மாநகர பகுதியில் வெளிமாவட்ட, வெளிமாநிலத்தை சேர்ந்தவரகள் வந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வீசப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகின்றது. பொதுமக்கள் மத்தியில் தவறான தகவலை பரப்பி இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேட்டி அளித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “அனைத்து சம்பவங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இரு சக்கர வாகனம் வேகமாக செல்வதால் பைக் எண்ணை சிசிடிவி காட்சிகளில் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகின்றது. ஒரு சில குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வருகிறது.. பிரச்னை ஏற்படுத்தும் விதமாக பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். கோவையில் 3500 போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கபடுகின்றது. 28 புதிய சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.