இலங்கையில் ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்த ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 250 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சாஹரன் ஹசிம். இவருடன் கோவையைச் சேர்ந்த அசாருதீன் என்பவருக்கு தொடர்பு இருந்ததாக, தேசிய புலனாய்வு முகமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோவை, உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட 7 இடங்களில் என்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். முதல்கட்டமாக உக்கடம் அன்புநகர் பகுதியில் வசித்து வரும் முகமது அசாருதீன் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனை நடத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல் குனியமுத்தூர் பகுதியில் கட்டுமான வடிவமைப்பு பணி மேற்கொண்டு வரும் அபுபக்கர் சித்திக் மற்றும் இதயத்துல்லா, நகைக்கடை நடத்தி வரும் சதாம் உசேன், அகரம் ஜிந்தா, சாயின்சா ஆகியோரின் வீட்டிலும் சோதனை நடத்தினர். இவர்கள் 6 பேர் மீதும், கேரள மாநிலம் கொச்சியில் அசம்பாவித செயல்களில் ஈடுபட்டதாக ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, முகமது அசாருதீன் ஐ.எஸ். அமைப்பு போன்று கலிஃபா சிஎப்எக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தை நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் ஐ.எஸ். கருத்துகளை பரப்பி வந்ததாகவும் என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகமது அசாருதீன் ஐஎஸ் அமைப்பின் கிராஃபிக்ஸ் லோகோ உள்ளிட்டவற்றை வடிவமைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், இலங்கை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹசிமுடன் முகநூல் மூலம் முகமது அசாருதீன் தொடர்பில் இருந்ததாகவும், தீவிரவாத கருத்துகளை பரஸ்பரம் பரிமாறி கொண்டதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் போது 14 மொபைல் போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப்டாப்கள், 6 மெமரி கார்டுகள் 300 ஏர்கன் குண்டுகள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கோவையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அசாருதீனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.