தமிழ்நாடு

கோவை: டாஸ்மாக் ஊழியர் கொலை; 800+ டாஸ்மாக் கடைகளை மூடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: டாஸ்மாக் ஊழியர் கொலை; 800+ டாஸ்மாக் கடைகளை மூடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

webteam

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலையுடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோவையில் டாஸ்மாக் கடைகளை மூடி விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் நேற்று இரவு டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்து கிளம்பிய டாஸ்மாக் விற்பனையாளர்கள் ராமு மற்றும் துளசிதாஸ் ஆகிய இருவர் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மண்டலம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கடைகளை மூடி டாஸ்மாக் விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்திலுள்ள 250-க்கும் மேற்பட்ட கடைகளை மூடிய டாஸ்மாக் விற்பனையாளர்கள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கோவை பீளமேடு மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்குற்றச் சம்பவத்துக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இனிவரும் காலங்களில் மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த துளசி தாஸ் மறறும் ராமு குடும்பத்திற்கு ஐம்பது லட்சம் ரூபாய் நிவாரணத்துடன் கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை வைத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அரசு தரப்பு மற்றும் டாஸ்மாக் மண்டல மேலாளரின் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கடைக்கு திரும்பிய ஊழியர்கள், அரசு தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடில் வரும் 8ஆம் தேதி அனைத்து சங்கங்களின் கூட்டுக்குழுவை கூட்டி போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்களின் இந்த போராட்டத்தால் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலம் முழுவதும் 10 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா