தமிழ்நாடு

கடை மூடிய பின்பும் மது கேட்டு டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இளைஞர்

கடை மூடிய பின்பும் மது கேட்டு டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இளைஞர்

webteam

கோவையில் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடையில் மதுபானம் கேட்டு ஊழியர் மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் ஆலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். இவருடைய மகன் ரஞ்சித். இந்நிலையில், அரசு உத்தரவுப்படி நேற்றிரவு 10 மணிக்கு அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டுள்ளது. ஆனால் ரஞ்சித் மதுபானம் கேட்டு கடை ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

அப்போது அங்கிருந்த அலுவலக உதவியாளர் சசிகுமார், நேரம் கடந்ததை சுட்டிக்காட்டி மதுபானம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து ரஞ்சித் மற்றும் அவருடன் வந்த சிலர் சசிகுமாரை தாக்கியுள்ளனர். அத்துடன் ரஞ்சித் மதுபான கடையையும் தாக்கியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து தலையில் காயமடைந்த சசிகுமாரை மீட்ட ஊழியர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.