தமிழ்நாடு

கோவை: கந்துவட்டி கொடுமை புகார் - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

kaleelrahman

கந்துவட்டி கொடுமையால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஷ்மி - செல்வம் தம்பதியினர். ராஷ்மியின் தாயார் தமிழ்ச்செல்வி அதே பகுதியில் வசிக்கும் கல்பனா என்பவரிடம் மாதச் சீட்டில் சேர்ந்துள்ளார். ஆனால், மாதச்சீட்டில் சேர்வதற்கு உத்திரவாதமாக வீட்டு அசல் நகல் பத்திரம் மற்றும் காசோலை (cheeque)  வேண்டும் என்று கல்பனா கேட்டுள்ளார்.

இதனால், தமிழ்ச்செல்வி ராஷ்மியின் காலிமனை இடத்தின் ஆவணம் மற்றும் நிரப்பப்படாத வங்கி காசோலை ஆகியவைகளை கல்பனாவிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், தொழில் செய்வதற்காக தமிழ்ச்செல்வி மற்றும் ராஷ்மி ஆகிய இருவரும் கல்பனாவிடம் இருந்து 8 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு மூன்று லட்சம் ரூபாய் பணத்தையும் கல்பனாவிடம் வாங்கியுள்ளனர். இந்த நிலையில் அதற்கு சரியாக வட்டி கட்டி வந்துள்ளனர். மேலும் ரூபாய் 5 லட்சத்து 45 ஆயிரம் பணத்தையும் திருப்பிக் கொடுத்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் ராஷ்மியின் தந்தைக்கு இருதய பிரச்னையும் தாயார் தமிழ் செல்விக்கு மார்பக புற்றுநோய் பிரச்னையும் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் கல்பனா ராஷ்மியின் வீட்டிற்குச் சென்று அவருடைய தாய் மற்றும் தந்தையிடம் உங்களுக்கு நோய்வாய்ப்பட்டுள்ளது நீங்கள் இறந்து விட்டால் என்னுடைய பணத்திற்கு யார் பொறுப்பு எனவே என்னுடைய பணத்தை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் இல்லை என்றால் உங்களுடைய வீட்டு பத்திரத்தை கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த ராஷ்மியின் தாய் மற்றும் தந்தை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த 10லட்சம் ரூபாய் பணத்தை கல்பனாவிடம் கொடுத்துவிட்டு தாங்கள் கொடுத்த அசல் பத்திரம், வங்கி காசோலை ஆகியவற்றை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஷ்மி இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு வந்த கல்பனா இவர்கள் இதுவரை கொடுத்த பணம் வட்டிக்கு மட்டும் தான் உள்ளது என்னுடைய முழு தொகையும் இவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த ராஷ்மி தனது கணவர் செல்வத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மனு அளிப்பது போல வந்து திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுப்பி வைத்தனர்.