தமிழ்நாடு

பூச்சி வகைகள் இவ்வளவா ? பிரம்மிப்பூட்டும் மெகா மியூசியம்

webteam

இந்தியாவிலேயே முதல் முறையாக துவங்கப்பட்டு பூச்சி அருங்காட்சியகம் 

இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் துவங்கப்பட்டு உள்ள பூச்சி அருங்காட்சியகம், எண்பதாயிரம் பூச்சிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பூச்சிகள் நாம் அன்றாட வாழ்வில் எந்த அளவிற்கு அதன் பங்கு உள்ளது என்பதை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பூச்சி அருங்காட்சியகத்தை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஐந்து கோடி ரூபாய் செலவில், 6691 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்ட பூச்சி அருங்காட்சியம் இன்று துவங்கப்பட்டது. இதில் 22,122 இனங்களை சேர்ந்த 84 ஆயிரம் பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் மற்றும் பூச்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா மட்டுமின்றி, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுகின்றன. கண்ணாடிக் கூண்டில் பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூச்சிகளுக்கு அருகே அதன் மேல்புறம் உள்ள எல்.இ.டி. திரையில், அந்தப் பூச்சிகளின் வகை,அவற்றின் நன்மை - தீமைகள், அவற்றை எந்தெந்த நாட்டில் பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டுகின்றன. பூச்சிகளால் உயிர் சூழல் எந்த அளவிற்கு மாறுபடுகிறது என்பதை தத்ரூபமாக காட்டி உள்ளனர். குறிப்பாக விவசாயத்திற்கு எந்தெந்த பூச்சிகள் நண்மை செய்கின்றன, தீமை செய்கின்றன என்பதை விளக்கும் மற்றும் அதன் தீர்வுகளும் இந்த அருங்காட்சியகத்தில் அமைந்து உள்ளதால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைய உள்ளது. மேலும்  வேளாண் உற்பத்திமற்றும் மாணவர்களுக்கான ஆராய்ச்சி தகவல்களுக்கு, ஆதார மையமாக பயன்படுத்தும் விதத்தில், அருங்காட்சியக செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலக அளவில் வெளிவந்திருக்கும் நூல்கள், தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு பெரிய கரையான் புற்றுகள் போன்றவை எல்லாம் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூச்சியின் பெயர், அறிவியல் பெயர், வாழ்விடம், அதன் வாழ்க்கை முறை, நன்மை அல்லது தீங்கு விளைவிக்க கூடியவை உள்ளிட்ட பல்வேறு விபரங்களும் இடம்பெற்றுள்ளன.ஒருவரின் முகத்தை வைத்து அதற்கேற்ற வகையில் பூச்சிகள் ஜாதகம் மற்றும் அவர்களின் பண்புகள் அடங்கிய தொழில்நுட்பம் அருங்காட்சியகத்தில்,அனைவரையும் ஈர்த்து உள்ளது.

பூச்சிகளின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் , மனிதர்களுக்கு எந்தெந்த பூச்சிகளால் பாதிப்பு என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இங்கு உள்ளது. இதனால் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்து உள்ளது.


                                                                                                            - சுஜாதா,செய்தியாளர் - கோவை.