தமிழ்நாடு

தடுப்பூசி மையங்களில் கூடும் மக்கள்: இணையத் தீர்வுக்கு ரூ.2 லட்சம் பரிசு - கோவை மாநகராட்சி

தடுப்பூசி மையங்களில் கூடும் மக்கள்: இணையத் தீர்வுக்கு ரூ.2 லட்சம் பரிசு - கோவை மாநகராட்சி

நிவேதா ஜெகராஜா

கோவையில் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் பிரச்சனைக்கு இணையவழித் தீர்வை கண்டுபிடித்துச் சொன்னால், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படுமென கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக கோவையில் தடுப்பூசி மையங்களில் தினந்தோறும் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடிவருகிறது. கூட்டம் கூடும் நேரங்களிலெல்லாம், பலரும் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இப்படி நிற்பவர்களில் பெரும்பாலானோருக்கு இறுதியில் தடுப்பூசிக்கான டோக்கன் கிடைக்காமல் போகும் சூழல் அதிகமாக உள்ளது. இதனால் ஆத்திரமடையும் அவர்கள், சாலை மறியலில் ஈடுபடும் சம்பவங்களும் கோவையில் நிறைய நடக்கிறது. இதை தவிர்க்க கோவை மாநகராட்சி பல நிலைகளில் ஆலோசித்தும் முடிவு கிடைக்கவில்லை. அடிக்கடி கோவை முழுவதிலும் உள்ள தடுப்பூசி மையங்களிலும் பரபரப்பு ஏற்படுவதை தடுக்க எண்ணி, புதுவித போட்டியை அறிவித்துள்ளது மாநகராட்சி.

இப்போதைக்கு கோவையில் ஒவ்வொரு மையத்திலும் தினமும் 300 லிருந்து 200  தடுப்பூசிகள் என்ற விகிதத்தில் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோவையில் மொத்தம் 40 க்கும் குறைவில்லாத மையங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி மையங்களில் பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கும்பொருட்டு இதை மக்களுக்கு அறிவித்த கோவை மாநகராட்சி முதற்கட்டமாக கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி மையங்களின் விவரத்தை காலை 8 மணிக்கு அறிவித்து, பின் 10 மணிக்கு டோக்கன் விநியோகித்தது. இப்படி செய்தபோதும்கூட பொதுமக்கள் அதிகளவில் மையங்களில் கூடினர். அதனால் தொடர்ந்து ஆங்காங்கே பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது.

ஆகவே இம்முயற்சியின் அடுத்தகட்டமாக போட்டியொன்றை அறிவித்துள்ளது கோவை மாநகராட்சி. அதன்படி இந்த பிரச்னையை தீர்க்க கோவை மாநகராட்சியானது தமிழ்நாடு எம்.எஸ்.எம்.இ., துறைக்கு கீழ் செயல்படும் ஸ்டார்ட்-அப் TN என்ற நிறுவனத்துடன் தற்போது இணைந்துள்ளது.

இவர்கள் இணைந்து கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களின் விவரங்கள், முன்பதிவு குறித்த தகவல்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சான்று பெறுதல், தடுப்பூசிகள் செலுத்தியவர்களின் தரவுகள் உள்பட அனைத்து விவரங்களை பெறுவதற்கான வசதிகள் ஒரே இடத்தில் ஏற்படுத்தி வழங்குவதற்கான இணைய வழி தீர்வை கண்டுபிடிப்பதற்கான போட்டியை அறிவித்துள்ளனர். சிறந்த தீர்வு அடங்கிய அந்த கண்டுபிடிப்புக்கு ரூ.2 லட்சம் ரொக்கமும், ரூ. 3.5  லட்சம் மதிப்பிலான AWS பரிசும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் இணையம் மூலம் எளிதாக முன்பதிவு செய்யும் டிஜிட்டல் திறன் கொண்டவர்கள்; தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யக்கூடிய பகுதி அளவு டிஜிட்டல் திறன் கொண்டவர்கள்; நேரடியாக மையங்களுக்கு வருபவர்கள் மற்றும் தமிழில் வழிகாட்டுதல் தேவைப்படுபவர்கள் என பலதரப்பினருக்கும் பங்கேற்கலாம். அவர்கள் சொல்லும்தீர்வு, அனைத்துக்குமான தீர்வாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதியாக உள்ளது.

ஆர்வம் உள்ளவர்கள் வரும் 26 ஆம் தேதிக்குள் இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்ய: https://startuptn.in/response-forms/open-innovation-challenge-001/ என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு https://startuptn.in/events/open-innovation-challenge-covid19-vaccine-slot-man/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

- ஐஸ்வர்யா