செய்தியாளர்: இரா.சரவணபாபு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டு ரயில்வே காலணி பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதம் என்பவர், 23 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா புருஷோத்தமனிடம் புகாரளித்துள்ளார். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் இது குறித்து இளைஞர் கவுதம் புகாரளித்த நிலையில், அந்த பகுதியில் தூய்மை பணிகளுக்காக துப்புரவு தொழிலாளிகள் வந்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த 23 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா அவரது கணவர் புருசோத்தமன், மற்றும் அவரது மகன் ஆகியோர், தூய்மை பணிகளை மேற்கொள்ள வந்த துப்புரவு பணியாளர்களிடம் “இங்கு தூய்மை பணிகள் செய்ய வேண்டாம்” என்று தெரிவித்ததுடன் கவுதமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியுள்ளனர். இதில் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்ட நிலையில் அவர், ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.