தமிழ்நாடு

கோவை சாதிய வன்கொடுமை: மாவட்ட எஸ்பி, டிஆர்ஓ தலைமையில் விசாரணை

கோவை சாதிய வன்கொடுமை: மாவட்ட எஸ்பி, டிஆர்ஓ தலைமையில் விசாரணை

kaleelrahman

கோவை ஒட்டர்பாளையம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சாதிய வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாக ரத்தினம் விசாரணை நடத்தி வருகிறார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாக ரத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற விசாரணை கடந்த இரண்டு மணிநேரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சம்பவம் நடந்த இடமான விஏஓ அலுவலகத்தையும் நேரில் எஸ்பி சென்று பார்வையிட்டார். இந்நிலையில் கோவை அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையிலான குழுவினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அன்னூர் ஒட்டர்பாளையம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றும் முத்துசாமி, காலில் விழுந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோபாலசாமி என்பவர் தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெரியப்பா பெயருக்கு மாற்றியது எவ்வாறு என கேட்கத்தான் விஏஓ அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றள்ளது.

நில பெயர் மாற்றம் மற்றும் காலில் விழுந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொ:ண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து விஏஓ, முத்துசாமி மற்றும் கோபல்சாமி ஆகியோரிடம் காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விசாரணையின் முடிவில்தான வழக்குத் தொடரப்படுமா, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி அடுத்து சிலமணி நேரங்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக இருதரப்பிடமும் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மாலை ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.