கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி பீளமேடு காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
பாலாஜி உத்தமராமசாமி, திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இரு தினங்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் `தைரியம் இருந்தால் கோவையில் கால் வைத்து பார்’ உள்ளிட்ட சில காட்டமான வார்த்தைகளுடன் பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். இதுபோன்ற கருத்துக்களுக்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலாஜி உத்தமராமசாமி கைதை கண்டித்து, பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். `இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல்’ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை கைது செய்துள்ளனர் என சொல்லப்படுகிறது. அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்ற காவலில் 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவரது கைதுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில் `தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களை இந்த திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் அவரை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராசாவை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆ.ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” என்றுள்ளார்.
இதையும் படிக்க: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் படங்களை பேனரில் போட்டு வம்பிழுக்க முயற்சி- இபிஎஸ் தரப்பினர் மீது புகார்