செய்தியாளர்: பிரவீண்
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நகைகள் சரிபார்ப்பு பணி கோவை இந்து சமய அறநிலைத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் அர்ச்சகர் (தினக்கூலி) ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடையுள்ள 7 பொன்தாலி, 14 பொன் குண்டுகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவை போலியானது என கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்தனர். விசாரணையில் நகைகளை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அறங்காவலர்கள் குழு மற்றும் கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.
அர்ச்சகர் அம்மனின் தாலி, பொன் குண்டுகள், வெள்ளி பூணாலை திருடிய இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.