Mayor Kalpana pt desk
தமிழ்நாடு

கோவை, நெல்லை மாநகராட்சிகளின் திமுக மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா - பின்னணி என்ன?

webteam

கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து திமுகவை சேர்ந்த கல்பனா ராஜினாமா செய்துள்ளார். கோவை மாநகராட்சி ஆணையரிடம் ராஜினாமா கடிதத்தை மேயர் கல்பனா வழங்கினார். கோவையின் முதல் பெண் மேயரான கல்பனா மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அத்துடன், மாமன்றக் கூட்டங்களில் திமுக கவுன்சிலர்களே சில நேரங்களில் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

“உடல்நிலை மற்றும் குடும்பச் சூழலால் கோவை மேயர் ராஜினாமா செய்துள்ளார்” என்று மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். அத்துடன், மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக அவர் அறிவித்தார்.

கோவை மேயர் கல்பனாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் பதவியில் இருந்து விலகியுள்ளார். நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். மேயர் சரவணன் கூட்டும் மாமன்றக் கூட்டங்களில் பங்கேற்காமல் திமுக உறுப்பினர்கள் புறக்கணித்து வந்தனர்.

கோவை, நெல்லை மேயர்கள் மீதான புகாரை விசாரித்து அமைச்சர் கே.என். நேரு திமுக மேலிடத்திற்கு அறிக்கை அளித்து இருந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளனர். அறிக்கை அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை, கோவை மேயர்கள் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் திமுகவை சேர்ந்த இரண்டு மேயர்கள் பதவி விலகியது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.