விபரீத முடிவெடுத்த தம்பதியர் pt desk
தமிழ்நாடு

”மகன் இல்லாத உலகில்..” | மூளை காய்ச்சலால் உயிரிழந்த மகன் - மன உளைச்சலில் காதல் தம்பதி விபரீத முடிவு!

கோவையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மூளை காய்ச்சலால் மகன் உயிரிழந்த நிலையில், மன அழுத்தத்தில் இருந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஐஸ்வர்யா

சிவகாசியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்தசலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பட்டதாரியான இருவரும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கியிருந்த இவர்களது மகனுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகன் 2 நாட்களில் மூளை காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

Death

இந்நிலையில், தங்களது ஒரே மகனை பறிகொடுத்த சோகத்தில் இருந்த தம்பதியர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். இதையடுத்து சரவணம்பட்டி பகுதியில் இருந்து வேடப்பட்டி பகுதிக்கு குடிபெயர்ந்த இவர்கள், தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகாமல் கடந்த 2ம் தேதி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து அறையை காலி செய்யவதற்காக ஹோட்டல் ஊழியர் கதவை தட்டிப் பார்த்தும் திறக்காததால் மாற்று சாவியை கொண்டு அறையை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது இருவரும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், மகன் இல்லாத உலகில் இருக்க முடியவில்லை. தங்களது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோவை காட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police station

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.