தமிழ்நாடு

கோவை: கூடுதல் பணம் கேட்டு இறந்தவரின் உடலை கொடுக்க மறுத்ததாக மருத்துவமனை மீது புகார்

கோவை: கூடுதல் பணம் கேட்டு இறந்தவரின் உடலை கொடுக்க மறுத்ததாக மருத்துவமனை மீது புகார்

kaleelrahman

கோவையில் கொரோனா சிகிச்சையில் இருந்து உயிரிழந்தவரின் உடலை கொடுக்க  தனியார் மருத்துவமனை கூடுதல் பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த காதர் என்பவர் கொரோனா தொற்று காரணமாக சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு கட்டணமாக 20 லட்சம் ரூபாயை மருத்துவமனை நிர்வாகம் விதித்து இருந்தது. இதில், 16 லட்சம் ரூபாயை காதர் குடும்பத்தினர் செலுத்தி இருந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் 16 லட்சம் செலுத்திய நிலையில் மீதமுள்ள 4 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தினால் மட்டுமே உடலை கொடுக்க முடியும் என மனு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கும் நிலையில், கூடுதல் கட்டணம் வசூல் செய்ததுடன் இறந்தவரின் உடலை கொடுக்காமல் செயல்படும் மனு மருத்துவமனை நிர்வாகம் குறித்து, சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் காதரின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய கொரோனா தடுப்பு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக், மருத்துவமனை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்திரவிட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று நேரில் எழுத்துபூர்வமாக புகார் அளிக்கும்படி காதரின் உறவினர்களுக்கு சிறப்பு அதிகாரி சித்திக் உத்தரவிட்டார்.