கோவையில் தனியார் ஆசிரம உரிமையாளரை துப்பாக்கி முனையில் கடந்தி ரூ.35 லட்சம் பணத்தை பறித்து தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், ஈரோடு மாவட்டத்தில் புலிப்பாணி சித்தர் மடம் வைத்து நடத்தி வருகிறார். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டுமே கோவை வரும் இவர், கடந்த 7 ஆம் தேதி வழக்கம்போல் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் 8-ஆம் தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது.
அப்போது வேனில் வந்த மர்ம நபர்கள் தாங்களை பேரூர் போலீசார் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்ததாகவும் அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சரவணன் அவர்களிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சரவணனை வேனுக்குள் இழுத்துப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை வேனில் கடத்திச் சென்று பழனியில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்துள்ளனர்.
துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை வைத்து மிரட்டி அவரது மனைவியிடம் ரூ.1.10 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிரச்சியடைந்த அவரது மனைவி ரூ.35 லட்சம் பணத்தை தயார் செய்துள்ளார். இதையடுத்து பணத்தை சேலம் மாவட்டம் திருச்செங்கோடு மணல்மேட்டில் வைத்து பணத்தை பெற்ற மர்ம கும்பல், அதன் பிறகு பழனியில் இருந்த சரவணனை விடுவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சரவணன் கோவை பேரூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் அவரை கடத்திச் சென்ற மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அவரது மடத்திலோ அல்லது நிறுவனத்திலோ வேலை செய்வோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.