செய்தியாளர்: சுதீஷ்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வீரன் - செண்பகவல்லி தம்பதியர். இவர்கள் தங்களது இரு குழந்தைகளுடன் கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களின் மகளான சிறுமி கோகுல பிரியா, அதேபகுதியில் வசிக்கும் வான்மதி என்பவரது வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவுக்கு நேற்று சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வான்மதி வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது, வான்மதி, ஏற்கனவே கோகுல பிரியா வீட்டுக்குச் சென்று விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து தண்ணீர் தொட்டி அருகே தண்ணீர் சிந்திக் கிடந்ததைப் பார்த்து சந்தேகமடைந்த கோகுல பிரியாவின் பெற்றோர் தண்ணீர் தொட்டியை திறக்கும்படி கூறியுள்ளனர். முதலில் தண்ணீர்த் தொட்டியை திறக்க மறுத்த வான்மதி வீட்டினர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தண்ணீர் தொட்டியை திறந்துள்ளனர். அதில் சடலமாக கிடந்த கோகுல பிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி செண்பகவல்லி அளித்த புகாரின் பேரில், பேரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.